வாஷிங்டன்: ஈரான் அச்சுறுத்தலை ஒழிக்க உறுதியுடன் செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டிரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் அணு ஆயுத திறனை பெறுவதை எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணைகள் உருவாக்கும் முயற்சிகளை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உடனடி அச்சுறுத்தல்களை நீக்கி, அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.
ஈரானில் நடைபெற்று வரும் வான்வழி தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
