சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து மனு குறித்து எழுந்த கேள்விக்கு, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், “விஜய், அவரது மனைவி மற்றும் நீதிமன்றம் ஆகிய மூவருக்கிடையிலான பிரச்னையாகவே இதைப் பார்க்கிறேன். இது ஒரு தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவம். அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை,” என்றார்.
அரசியலுக்கு வந்தவுடன், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை கூட பொதுவெளியில் பேசப்படும் நிலை உருவாகும் என்றும், “அரசியல் என்பது தீப்பந்தத்துக்குள் நுழைவதைப் போன்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் அரசியலுக்கு வரும்போது இத்தகைய சவால்கள் இருப்பதை உணர்ந்திருப்பார் என தெரிவித்த அவர், இந்த விவகாரத்தை அரசியலாக்குவது தகுதியற்றது என்றும் கூறினார்.
“கணவன்-மனைவிக்குள் உள்ள பிரச்னையை அரசியல் நோக்கில் பார்க்கக்கூடாது. அனைவருக்கும் அமைதி, சந்தோஷம் கிடைக்கட்டும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
