புதுடில்லி: தங்கள் துறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சாதனை திட்டங்கள் குறித்து விரிவான ‘ரிப்போர்ட் கார்டு’ தயாரித்து சமர்ப்பிக்குமாறு அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பிரதமர் அலுவலகம் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேவா தீர்த் வளாகத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, அமைச்சரவை கூட்டங்களில் பல்வேறு கொள்கை ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்திய கூட்டத்தில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த விரிவான செயல்முறை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதற்கான சிறப்பு படிவம் ஒன்றை மத்திய அமைச்சரவைச் செயலகம் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில், துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்கள், திட்ட கண்காணிப்பு, பயனாளிகளுடன் மேற்கொண்ட தொடர்புகள் போன்றவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாங்கள் சாதித்த முக்கிய முன்னேற்றங்கள் என்ன என்பதையும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு அமைச்சர் மாற்றப்பட்டாலும் துறை திட்டங்கள் தடையின்றி தொடர வேண்டும் என்ற நெறிமுறையையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
2047க்குள் ‘வளர்ந்த பாரதம்’ என்ற இலக்கை எட்ட தெளிவான செயல்திட்டம் அவசியம் என்பதால், துறைகள் தொடர்ச்சியான கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தேவையெனில் அமைச்சரவை கூட்டங்களில் நேரடி விளக்கவுரை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
