சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் இலவச வாக்குறுதிகள், எதிர்காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக மாறும் என்ற கவலை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரிடம் உருவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இத்திட்டங்களுக்கான செலவுகளை சமாளிக்க மின்சார நிலைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும், குறிப்பாக தாழ்வழுத்த மின்சார இணைப்பில் சிறு தொழில்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், உச்ச நேர மின்சார பயன்பாட்டுக்கு கூடுதல் 15 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவது தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள் வழியாக சொத்து வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் புதிய இலவச திட்டங்களின் செலவினை ஈடுகட்ட எதிர்காலத்தில் மின் கட்டணம் மற்றும் வரிகள் மீண்டும் உயரக்கூடும்; அதன் தாக்கம் தொழில்துறையையே அதிகமாக பாதிக்கும் என தொழில் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
