புதுடில்லி: தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதைத் தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் விசாரணையை, தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இலவச திட்ட வாக்குறுதிகள் மாநில அரசுகளுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுத்துகின்றன எனக் கூறப்பட்டது. மேலும், இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும் என்றும், இலவச வாக்குறுதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த மனுவை அவசரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும், தேர்தல் முடிந்த பின் வழக்கை விரிவாக விசாரிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
