புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினர் 8 பேரை மூளைச்சலவை செய்து இயக்கிய நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் மூத்த தளபதி ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியோருடன் நேரடி தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள், அமைப்பினரால் ‘சாச்சா ஜி’, ‘தாயா ஜி’ என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வலைப்பின்னலில், வங்கதேசத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷபீர் அகமது லோன் முக்கிய பங்காற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் பயிற்சி பெற்ற நபர்களை மூளைச்சலவை செய்து இந்தியாவிற்குள் அனுப்பும் பணியில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
டில்லியில் சமீபத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய இருவரை டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதானோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
நம் நாட்டில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் நோக்கில், வங்கதேசத்தினரை அமைப்பில் இணைக்கும் பணியில் லோன் ஈடுபட்டதாகவும், இதற்கு பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. நிதி உதவி அளித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘ஸ்லீப்பர் செல்’ முறையில் செயல்பட அவர்களுக்கு கட்டளைகள் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கைதான நபர், லோனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், தமிழகத்தில் கைதான ஆறு பேரை கொல்கத்தாவிற்கு வரவழைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்புகளை பராமரிக்க, ‘வாட்ஸ்அப்’, ‘சிக்னல்’ போன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஷபீர் அகமது லோனை, டில்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
