டெஹ்ரான்: ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர கால எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் அதிகரித்துள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், ஈரானில் வசிக்கும் இந்திய மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் யாத்ரீகர்கள், கிடைக்கக்கூடிய வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடவுச்சீட்டு மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், போராட்டங்கள் அல்லது கூட்டம் நடைபெறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனிப்பதோடு, இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவசர உதவி அல்லது தகவல் தேவைகளுக்கு, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
