புதுடில்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினார்.
அவர் பேசியதாவது: விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பயனுள்ளதாக அமைகிறது. சமீபத்திய ஏஐ மாநாட்டில் நமது நாட்டின் முன்னேற்றத்தை காண முடிந்தது. டிஜிட்டல் முறைகேடுகளை தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்வேர்டு, ஆதார் ஓடிபி, வங்கி விவரம் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.
ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர். அவர் பெண் சக்தியின் உருவமாக திகழ்ந்தார். அவரின் தேசபக்தி மிகவும் போற்றத்தக்கது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையாக பாடுபட்டார். பல பெண்களின் மனதை கவர்ந்த தலைவராக இருந்தார். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நான் குஜராத் முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் அவர் நேரில் கலந்து கொண்டார்.
மக்களுக்காக வாழ்ந்தவர்கள் அவர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதற்கு ஜெயலலிதா உதாரணம். அவரது சிந்தனை தெளிவானது. தமிழகம் செல்லும் போதெல்லாம் அவரது பெயரை குறிப்பிட்டவுடன் மக்களின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சி என்னை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பணியை நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.
மேலும், கேரளாவை சேர்ந்த 10 மாத குழந்தை அலின் ஷெரீன் ஆப்ரகாம் குறித்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் மனிதநேய முடிவை அவர் பாராட்டினார்.
