தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நகராட்சித் துறை அமைச்சரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்கத் துறை ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்ததாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், அந்த ஆதாரங்கள் முறையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளதை விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசுக்கு அவமானம் ஏற்படுவதாக கூறியுள்ள விஜய், அமைச்சர் தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளையும் இணைத்து குறிப்பிட்ட அவர், மக்கள் நலனுக்கான நிர்வாகமே முக்கியம் என்றும், வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
