சென்னை: வரும் 2026–27ம் நிதியாண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவின மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன. மாநிலத்தின் மொத்த வரி வருவாய் மதிப்பீடு திருத்தப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி. வருவாய் குறைவு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2026–27ம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாகவும், வரியல்லாத வருவாய் ரூ.27,704 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மானியங்கள் நடப்பாண்டு திருத்த மதிப்பீட்டில் குறையும் என்றும், மத்திய அரசிடமிருந்து பெறும் தொகைகளின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில், பொங்கல் பரிசு மற்றும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்காக அரசு கூடுதல் செலவினம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொத்த வருவாய் செலவினம் ரூ.3.93 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலதன செலவினம் திருத்த மதிப்பீட்டில் குறைந்திருந்தாலும், 2026–27ம் ஆண்டிற்காக ரூ.59,562 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை நடப்பாண்டில் உயர்ந்த நிலையில், வரும் ஆண்டில் அது குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நிதிப் பற்றாக்குறை உயர்ந்த அளவில் நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மாநிலத்தின் கடன் ரூ.9.52 லட்சம் கோடியாக இருந்த நிலையில், மத்திய அரசு வழங்கும் தொகைகளை நீக்கினால் 2026–27ம் ஆண்டில் அது ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
