புதுடில்லி: அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மும்பையின் பிரபலமான மெரீன் டிரைவ் பகுதியில் காலை நேரத்தில் ஜாகிங் சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இது அவரது நான்காவது இந்தியப் பயணம் ஆகும். இன்று அதிகாலை மும்பை வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
காலை நேரத்தில், தனது பாதுகாப்பு பணியாளர்களுடன் மட்டுமே மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் மேக்ரான் ஜாகிங் சென்றார். பொதுமக்கள் மத்தியில் மிகவும் சாதாரணமாக அவர் நடந்துகொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மும்பையில் உள்ள லோக் பவனில், பிரதமர் நரேந்திர மோடியை மேக்ரான் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
முக்கியமாக, பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, ‘இந்தியா – பிரான்ஸ் இன்னோவேஷன் இயர் 2026’ நிகழ்ச்சியையும் இரு தலைவர்களும் துவக்கி வைக்க உள்ளனர்.
மேலும், பிப்ரவரி 19ல் டில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் மேக்ரான் பங்கேற்கிறார்.
