கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் மிட் ஆன் திசையில் ஷாகின் ஷா அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக விளையாடினார். ஷாகின் ஷா அப்ரிடி வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இஷான் கிஷனும் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பவர் பிளே முடிவில் இந்தியா 52 ரன்கள் எடுத்தது.
அப்ரார் அகமது வீசிய ஓவர்களில் இஷான் கிஷன் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் பந்தில் போல்டானார்.
2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் – திலக் வர்மா ஜோடி 87 ரன்கள் கூட்டணி அமைத்தது. பின்னர் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இந்தியா 11.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
திலக் வர்மா 25 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆனார். இதனால் இந்திய அணிக்கு சற்றே அழுத்தம் ஏற்பட்டது.
இறுதி ஓவர்களில் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து ஸ்கோரை முன்னேற்றினர். 18.5 ஓவர்களில் இந்தியா 159 ரன்களை எட்டியது.
