நியூயார்க்: இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் இடைக்கால ஒப்பந்தமாக எட்டப்பட்டன. தொழில்துறை, உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா எரிசக்தி பொருட்கள், நிலக்கரி மற்றும் விமானங்கள் வாங்கும் திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 50ல் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற ‘சாம்பியன் ஆப் கோல்’ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்திய ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்கது என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: அமெரிக்கா தற்போது உலகின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளராக உள்ளது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அமெரிக்காவின் நிலக்கரி ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும். உலகில் சிறந்த தரமான நிலக்கரியை அமெரிக்கா வழங்கும் என அவர் தெரிவித்தார்.
