பெங்களூரு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் உருது மொழி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிராக பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் உருது மொழி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உருது மற்றும் பிற சிறுபான்மை மொழி பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து மார்ச் 20 வரை, உருது மொழி பள்ளிகள் காலை 8.00 மணி முதல் பகல் 12.45 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது:
ரம்ஜான் பண்டிகைக்காக பள்ளி நேரம் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஹிந்து பண்டிகைக்காகவும் இதுபோன்று பள்ளி நேரம் மாற்றப்பட்டதில்லை. நவராத்திரி போன்ற பண்டிகைகளுக்கும் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை.
ஓட்டு வங்கி அரசியலுக்காக சலுகைகள் வழங்கக் கூடாது. மாணவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சலவாதி நாராயணசாமி கூறியதாவது:
காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஹிந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ரம்ஜானுக்கு தனி கவனம் செலுத்தும் முதல்வர் சித்தராமையா, ஹிந்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறவே மாநில அரசு இவ்வாறு செயல்படுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
முஸ்லிம் மக்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சமமாக நடத்த வேண்டும். பள்ளி நேரம் மாற்றப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்கள் சமமாக நடத்தப்படுவதை விரும்பாதவர்களாகவே பார்க்கப்படுவர் என்றார்.
