தமிழகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் தரப்பின் விளக்கம்
போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார்கள் தற்போது முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதில் புகார் அளிப்பவரின் முகவரி, தொடர்பு எண், எதிர்மனுதாரரின் விவரங்கள், அவர்மீது உள்ள வழக்குகள், குற்றம் நடைபெற்ற இடம், தொடர்புடைய சட்டப் பிரிவுகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவாகின்றன.
இதுவரை புகார் அளிப்பவர்களிடமிருந்து எந்த அடையாள ஆவணங்களும் பெறப்படாததால், சில சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அவர்கள் கிடைக்காத நிலையும், பொய் புகார் அளித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சி.சி.டி.என்.எஸ் மென்பொருள் மேம்படுத்தப்பட்டு, ‘சி.சி.டி.என்.எஸ் 2.0’ என்ற புதிய வடிவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர் நேரடியாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காகித பயன்பாடும், நேர விரயமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி, போலீஸ் ஸ்டேஷன்களில் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் புகார் அளிப்பவர்கள், ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை புகாருடன் இணைக்க வேண்டும்.
அடையாள ஆவண நகல் இணைக்கப்பட்டாலே, புகார் பெற்றதற்கான சி.எஸ்.ஆர் அல்லது மனு ரசீது வழங்கப்படும் என்றும், இந்த நடைமுறை ஜனவரி 24 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
