சென்னையில் புலம்பெயர் குடும்ப கொலை: இபிஎஸ், அண்ணாமலை கடும் கண்டனம்
சென்னையில் புலம்பெயர் தொழிலாளி குடும்பம் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியைச் சேர்ந்த இந்த கொடூர சம்பவத்தில், மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று கவுரவின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், அதைத் தடுக்க முயன்ற கணவரை தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் இரண்டு வயது குழந்தையையும் கொடூரமாக கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மனிதநேயத்தை உலுக்கும் வகையில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ‘வந்தாரை வாழ வைக்கும்’ தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த கொலை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலை தனது அறிக்கையில், சென்னையின் மையப்பகுதியில் இத்தகைய குற்றம் நடந்தது கவலைக்குரியது என தெரிவித்தார். கவுரவ் குமாரின் உடல் சாக்குப்பையில் கட்டி சாலையோரம் வீசப்பட்டதும், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதும், மனைவியின் உடலை போலீசார் தேடி வருவதும் திமுக ஆட்சியின் கீழ் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதை காட்டுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
