சென்னை குடும்ப கொலை விவகாரம்: பீஹார் மாநிலத்தில் 5 பேர் சிக்கினர்
சென்னை அடையாறு இந்திரா நகரில் சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், கொல்லப்பட்ட இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையும் கொலையாளிகளால் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26ம் தேதி, அடையாறு இந்திரா நகர் 1வது அவென்யூ சாலையோரத்தில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். உயிரிழந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என தெரிய வந்ததை தொடர்ந்து, அவரது அடையாளத்தை உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
விசாரணையில், கொல்லப்பட்டவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும், முனிதா குமாரி என்ற மனைவி இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, கவுரவ் குமாருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் முனிதா குமாரியின் உடலை தேடும் பணியும் தொடர்கிறது.
இந்த வழக்கில் சிக்கந்தர், ரவீந்திரநாத் தாகூர், நரேந்திர தாகூர், பிகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் சிக்கந்தர் (30) என்பவர், கவுரவ் குமாரின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து சாலையோரத்தில் வீசியவர்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
