சென்னை சட்டசபையில் லாட்டரி நிறுவனம் வழங்கியதாக கூறப்படும் ரூ.900 கோடி நன்கொடை விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ், தங்களது கட்சியின் கொள்கை மதுவிலக்கு என்றும், தங்களது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அல்லது எம்எல்ஏக்கள் மதுத் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார். அதேவேளையில், திமுகவைச் சேர்ந்த சிலர் சாராய ஆலைகளை நடத்துவதாகவும், டாஸ்மாக் மூலம் அவர்களுக்கு வணிக ஆதாயம் கிடைக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள், “நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ், “லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்தார். மேலும், தாம் எந்த தொழிலும் நடத்தவில்லை என்றும் விளக்கமளித்தார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதிலளிக்கையில், “அந்த லாட்டரி நிறுவனத்தை நடத்துவது உங்கள் மாமனார்தான். ஏன் அந்த நன்கொடை வழங்கப்பட்டது என்பதை அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்” என்றார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் ஆதவ், “அது அவருக்கும், அவரது அப்பாவுக்கும் மட்டுமே தெரியும். அதற்கான விளக்கத்தை அவருடைய அப்பாவிடமே கேட்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, “அந்த நன்கொடை விவகாரத்தில் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் நன்கொடைகளை பெற்றுள்ளன. இதை லஞ்சம் போல் சித்தரிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
