66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடில்லி: நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகளை, பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்த 66 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
கலை, சமூக சேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டுக்கான பத்ம விருது பெறுநர்களின் பட்டியல் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதில் முதல் கட்டமாக, 66 பேருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் 2 பேருக்கு பத்ம விபூஷண், 6 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 58 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள்:
- நடிகர் தர்மேந்திர சிங் தியோல் – கலைத்துறை (திரைப்படம்)
(அவர் மறைந்துவிட்டதால், அவரது மனைவி நடிகை ஹேமமாலினி விருதை பெற்றுக்கொண்டார்) - என். ராஜம் – வயலின் கலைஞர்
பத்ம பூஷண் விருது பெற்றவர்கள்:
டாக்டர் கணேஷ், பகத் சிங் ஹோஷ்யாரி, உதய் சுரேஷ்குமார் கோடக், விஜய்குமார் மல்ஹோத்ரா, டாக்டர் கே.ஆர். பழனிசாமி மற்றும் பியூஷ் பாண்டே ஆகியோர் பத்ம பூஷண் விருதுகளை பெற்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் தமிழர்கள்:
தமிழ்நாட்டை சேர்ந்த ஹெச்.வி. ஹண்டே, கிருஷ்ணன் கிட்னா, முன்னாள் டிஜிபி கே. விஜயகுமார், எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
கிருஷ்ணன் கிட்னா மறைந்துவிட்டதால், அவரது சார்பில் சுசிலா கிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார்.
மேலும், புதுச்சேரியை சேர்ந்த பழனிவேல், பிரதமர் மோடி முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பின்னர் விருதை பெற்றுக்கொண்ட சம்பவம் விழாவில் கவனம் ஈர்த்தது.
இந்த விருது விழா நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது.
