புதுடில்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி 8 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மேற்காசியாவில் நிலவும் நிலைமைகள் குறித்து பிரதமர் மோடி பல நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அவர் ஆலோசனை நடத்திய நாடுகள் மற்றும் தலைவர்கள்:
ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நாஹ்யான்,
சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்,
கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி,
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்,
பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா,
குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் முபாரக் அல் சபா,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஆகியோர்.
இந்த ஆலோசனைகளில் மேற்காசியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
போர் சூழலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் எந்த நாடுகளுடன் என்ன ஆலோசனை நடைபெற்றது என்பது தொடர்பான தகவல்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் குறித்து அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
