ஓஸ்லோ: அரசு முறைப் பயணமாக நார்வே சென்றுள்ள பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்குப் பிறகு நார்வே சென்றடைந்தார். ஓஸ்லோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே நாட்டிற்கு சென்ற இந்தியப் பிரதமர் என்ற புதிய வரலாற்றை மோடி உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரை வந்தடைந்துள்ளேன். விமான நிலையத்தில் எனக்கு அன்பான வரவேற்பளித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்ருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தப் பயணம் இந்தியா – நார்வே இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின் போது, நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் மற்றும் ராணி சோன்ஜா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அதேபோல், நார்வே பிரதமர் ஜோனாஸுடன் இருநாடுகளின் உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓஸ்லோவில் நாளை நடைபெற உள்ள இந்தியா – நார்வே உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
