கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரித்தது.
2023 மே 26ஆம் தேதி, செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்து, அவர்களிடம் இருந்த லேப்டாப் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றதாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தனது பெயர் அரசியல் உள்நோக்கத்துடன் தாமதமாக சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, அசோக்குமார் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். சம்பவம் நடைபெற்ற போது தாம் அங்கு இல்லை என்றும், பிரச்னையை தூண்டியதாக தவறாக வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பு வாதிட்டது.
அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பி. தனபால், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது திடீரென நடவடிக்கை எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். கொலை வழக்குகளில்கூட மறுநாளே பதில் மனு தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த வழக்கில் அவகாசம் கோரப்படுவதற்கான காரணம் என்ன என்றும் நீதிபதி கேட்டார்.
இதையடுத்து, அரசு தரப்பு பதிலுக்காக வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார்.
