2வது நாளாக குற்றப்பிரிவு முன் ஆஜரான பவன் கேரா
Pawan Khera, Himanta Biswa Sarmaவின் மனைவி Riniki Bhuyan Sarma தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக Assam Police குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
முதல்வரின் மனைவி பல கடவுச்சீட்டுகள் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்துகள் உள்ளதாகவும் பவன் கேரா குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இதையடுத்து அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முன்னதாக புதன்கிழமை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான பவன் கேராவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், மீண்டும் அடுத்த நாள் ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வந்த பவன் கேரா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இன்றும் அதையே தொடர்வேன்” என்று தெரிவித்தார்.
விசாரணை தொடர்பான விவரங்களை தற்போது வெளியிட விரும்பவில்லை என்றும், விசாரணை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பேசுவேன் என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை இரவு குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து வெளியேறியபோது, “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கும் வரை அதற்கு ஒத்துழைப்பது என் கடமை” என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “சட்டம் தனது கடமையைச் செய்யும். பவன் கேரா சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என மத்திய அரசிடமிருந்து ஏற்கெனவே எழுத்துப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது” என்றார்.
மேலும், காவல்துறையின் விசாரணை நீண்ட காலம் எடுக்காது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
