சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என அமைச்சர் மற்றும் திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நலச்சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. எந்த அரசியல் கட்சியாலும் அதைத் தடுக்க முடியாது” என கூறினார்.
அரசின் மக்கள்நலத் திட்டங்கள் நேரடியாக மக்களிடம் சென்றுள்ளதாகவும், அறிவிக்கப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடசென்னையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அவர் குறிப்பிட்டு, அந்த பகுதியின் நலனுக்காக பல திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு, திமுகவிற்கு முழு ஆதரவு வழங்குவார்கள். தமிழகத்தில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் மகள் செந்தாமரை பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபரீசன், “திமுகக்கு களத்தில் எந்த போட்டியும் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்.
சபரீசன் முதன்முறையாக திமுக நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி ஏப்ரல் 6 என்றும், பரிசீலனை ஏப்ரல் 7 என்றும், திரும்பப் பெற கடைசி தேதி ஏப்ரல் 9 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
