திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள சுமார் 1,800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு வாசீஸ்வரர் கோவில் மற்றும் அதற்கு சொந்தமான நிலப்பகுதிகளில் மாட்டிறைச்சி கழிவுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தின் தூய்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சிவாலயமாகும். தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தரும் நிலையில், கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டிவருவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கழிவுகளை தெருநாய்கள் கோவில் வளாகத்திற்குள் இழுத்துச் செல்வதால், துர்நாற்றம் வீசுவதோடு வளாகம் அசுத்தமடைவதாகவும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கோவிலுக்கு சொந்தமான சுமார் 2.15 ஏக்கர் நிலப்பகுதியிலும் இதுபோன்ற கழிவுகள் வீசப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு மற்றும் துர்நாற்றப் பிரச்சினை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பக்தர்கள், கோவில் சுற்றுப்புறம் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
