குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மலேசியா அரசு 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சமூக வலைதள நிறுவனங்கள் பயனர்களின் வயதை கட்டாயமாக சரிபார்க்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். மேலும், 16 வயதிற்குட்பட்டவர்கள் புதிய கணக்குகளைத் தொடங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த விதிமுறைகள் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட முக்கிய சமூக வலைதளங்களான Facebook, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட தளங்களுக்கு பொருந்தும்.
அரசின் புதிய விதிகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அபராதத் தொகை ரூ.24 கோடி வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே சிறார்களின் சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோல், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளும் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
இதற்கிடையில், Meta நிறுவனத்தின் கொள்கை இயக்குநர் கிளாரா கோ, முழுமையான தடை விதிப்பது பதின்ம வயதினரை கட்டுப்பாடற்ற மற்றும் பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்குத் தள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
சிறார்களின் பாதுகாப்பு மற்றும் இணைய சுதந்திரம் ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது குறித்து உலகளவில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மலேசியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
