நரேந்திர மோடி, உலகம் பல்வேறு முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டு வரும் சூழலில், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா அவற்றை வலிமையுடன் சமாளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் ரூ.18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு முதன்முறையாக சூரத்திற்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், குஜராத் மக்கள் தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்தில் ஐந்து நாடுகளுக்குச் சென்றிருந்தபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து உலக நாடுகள் ஆர்வமாக விவாதித்ததாகவும், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வெற்றியையும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் சுயசார்பு முயற்சிகளை சிலர் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறிய அவர், நாட்டின் திறன் மற்றும் வலிமையை குறைத்து மதிப்பிடும் மனப்போக்கு வளர்ச்சிக்கு உதவாது என்றார்.
உலகம் தற்போது பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், உலகளவில் பெட்ரோல் விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதாக தெரிவித்தார்.
இருப்பினும், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியால் நாடு ஒவ்வொரு நெருக்கடியையும் உறுதியுடன் எதிர்கொண்டு வருவது தமக்கு மனநிறைவை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
