தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சர்ச்சுக்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் அருகே ஆனந்தநகர் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ. சர்ச்சில், அருள்ராஜ் (69) என்பவர் மதபோதகராக பணியாற்றி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, அந்த சர்ச்சுக்கு வந்த 12 வயது சிறுமியிடம் அவர் தொடர்ந்து பாலியல் ரீதியான அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி போலீசார் அருள்ராஜ் மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
