திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற தவெக ரோடு ஷோவில் Vijay பேசுகையில், “நீங்கள் எல்லோரும் விஜயை 100 சதவீதம் நம்பலாம். உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்துள்ளேன்” என உறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: நாளை மறுநாள் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னர் நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள், காவல்துறையினர் தொடர்பான திட்டங்களை பகிர்கிறேன்.
நெசவாளர்களுக்காக, தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்ய அரசின் உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் வெற்றி தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும். இலவச மின்சாரம் கைத்தறிக்கு 500 யூனிட்களாகவும், விசைத்தறிக்கு 1,500 யூனிட்களாகவும் உயர்த்தப்படும். நூல், சாயங்கள், ரசாயனங்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், முதியோர் ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, ரூ.15,000 கோடி ஸ்டேட் கிரெடிட் கியாரண்டி நிதி உருவாக்கப்படும். அதிகரித்த பீக் ஹவர்ஸ் மின்கட்டணம் நிறுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100% மின்சார வரிவிலக்கு வழங்கப்படும். தொழில்களை நவீனமயமாக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.50 லட்சம் வரை 35% மூலதன மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்காக, 5 ஏக்கருக்கு குறைவானவர்களுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும். குத்தகை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 100% பயிர் காப்பீடு நடைமுறைப்படுத்தப்படும்.
அரசு ஊழியர்களுக்காக, பழைய பென்சன் திட்டம் மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், நர்சுகள், பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். பதவி உயர்வுக்கு பணம் பெறும் முறையை நிறுத்தப்படும்.
காவல்துறையினருக்காக, அடிப்படை ஊதியம் ரூ.18,200 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். மன அழுத்த பணிகளுக்கு கூடுதல் ரூ.1,000 வழங்கப்படும். பணி நேரம் முறைப்படுத்தப்பட்டு, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும். சலவைப்படி ரூ.1,000 ஆக உயர்த்தப்படும். முக்கிய நகரங்களில் காவலர் நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
மேலும், “பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும். வெற்றி நிச்சயம்” என விஜய் தெரிவித்தார்.
இதற்கிடையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற ரோடு ஷோவில் அதிக வெயிலால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
