100 கி.மீ தூர இலக்கை துல்லியமாக தாக்கிய வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை
ஜெய்ப்பூர்: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Vayu Astra-1 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் Nibe Limited தெரிவித்துள்ளது.
புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனம் உருவாக்கிய வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை, இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற சோதனையின் போது, சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 100 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
மேலும், சோதனையின் போது தாக்குதலை நடுவிலேயே ரத்து செய்யும் திறனும், தேவையெனில் மீண்டும் திருப்பி தாக்கும் தொழில்நுட்ப வசதியும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த மற்றொரு முன்களக் கட்டுப்பாட்டு மையத்திற்கு ஏவுகணையின் கட்டுப்பாட்டை மாற்றும் திறனும் சோதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் பகுதியில் உயர் மலைப்பகுதிகளில் ஏவுகணையின் தொழில்நுட்ப திறன் பரிசோதிக்கப்பட்டது. 14 ஆயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தில், 90 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் திறனும் உறுதி செய்யப்பட்டது.
இலக்கை தாக்கிய பிறகும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் இந்த ஏவுகணைக்கு இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, மே 18 மற்றும் 19 தேதிகளில் Suryaastra ராக்கெட்டுகளின் சோதனைகளையும் நிபே லிமிடெட் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. அந்த ராக்கெட்டுகள் 150 கிலோ மீட்டர் மற்றும் 300 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
