தஞ்சை: “இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்திருப்பார்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற பூண்டி கலைச்செல்வனின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவின் அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, “தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான திமுக குடும்பங்கள் இருப்பதால்தான் எவ்வளவு பெரிய புயலை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து வர முடிகிறது. திமுக என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு சமூக இயக்கம்” என்று கூறினார்.
மேலும், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. தேர்தல் அரசியலில் மட்டுமே நாம் தோற்றுள்ளோம். ஆனால் கொள்கை அரசியலில் திமுக ஒருபோதும் தோற்காது” என்றும் தெரிவித்தார்.
“ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும் இன்றும், வாக்களித்த மக்களுக்காக மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்காகவும் நாம் உழைப்போம். தமிழகத்தின் மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம்” என்று உதயநிதி குறிப்பிட்டார்.
தொடர்ந்து தற்போதைய ஆட்சியை விமர்சித்த அவர், “இந்த பத்து நாட்களிலேயே மக்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை புரிந்துகொண்டிருப்பார்கள். போகப்போக இன்னும் பல உண்மைகள் வெளிவரும்” என்றார்.
மேலும், “தாயின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி கவர்பவர்களை பார்த்து சில நேரம் மயங்கலாம். ஆனால் அந்த கவர்ச்சி நிரந்தரமல்ல. பின்னர் உண்மையான பாசத்தை உணர்ந்து மீண்டும் தாயை தேடி வரும்” என்று உவமை கூறினார்.
“அதேபோல், கவர்ச்சி மாயாஜாலம் காட்டி மக்களை ஈர்த்திருக்கலாம். ஆனால் அது மக்களின் கஷ்டங்களை தீர்க்காது. அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்காது. எனவே மக்கள் மீண்டும் நமது கட்சி மற்றும் தலைவரை நோக்கி வருவார்கள். சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதிக்கும்” என்று உதயநிதி தெரிவித்தார்.
