ஸ்டாலின் தேர்தல் வெற்றி வழக்கில் இருந்து விலகிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
புதுடில்லி: 2011ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் M. K. Stalin வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் J. K. Maheshwari மற்றும் Vijay Bishnoi இருவரும் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் Saidai Duraisamy போட்டியிட்டார்.
தேர்தல் முடிவில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் சைதை துரைசாமி குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் பணிகளில் அரசு இயந்திரங்கள் ஸ்டாலினுக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது, ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டதுடன், இரு தரப்பும் விரிவான வாதங்களை முன்வைத்தன.
வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என தெரிவித்து இரு நீதிபதிகளும் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பக்கங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் புதிய அமர்வு முன் மீண்டும் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கில் இருந்து விலகியதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையில், நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி வரும் ஜூன் 28ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது
