சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து ராஜிநாமா செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து, கட்சி மேலிடத்திலிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும், மாநிலத் தலைமை மாற்றம் தொடர்பாகவும் தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பாஜக மீது யாரும் புகார் அளிக்கவில்லை என்றும், கட்சி தலைமை தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், நலம் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்து 25 நாட்கள் கடந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முந்தைய திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு நடைபெற்றதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கணினிகளில் இதுபோன்ற சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்று சந்தேகம் தெரிவித்தார்.
மேலும், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆவேசமாக பேசியதாகவும், திரைப்பட வசனங்களைப் போன்று பேசியது ஏற்கத்தக்கதல்ல என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
தவெகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளை குறைத்து மதிப்பிட்டு பேசுவதாகவும், மக்கள் பிரச்னைகளுக்காக நீண்ட காலம் போராடிய அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால் அரசியல் அடிப்படை தெரியாமல் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வரின் பேச்சு, அவருக்கு வாக்களித்த மக்களே வருந்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘இந்தியா’ கூட்டணி ஏற்கனவே உடைந்துவிட்டதாகக் கூறிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 30-க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ள நிலையில், காங்கிரஸ் அதுபோன்று செயல்படவில்லை என்றும் விமர்சித்தார்.
