மார்ஷ் மிரட்டல்; சென்னை அணியை வீழ்த்திய லக்னோ
Chennai Super Kings அணிக்கு எதிரான போட்டியில் Lucknow Super Giants வீரர் Mitchell Marsh அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்ததால், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக நேற்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் Rishabh Pant முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. லக்னோ பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங்கின் வேகத்தில் கேப்டன் Ruturaj Gaikwad 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து சாம்சன் 20 ரன்களிலும், உர்வில் படேல் 6 ரன்களிலும் வெளியேறினர்.
7.2 ஓவரில் 52/3 என திணறிய சென்னை அணியை பிரவிஸ் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி மீட்டது. பின்னர் கார்த்திக் சர்மா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
இறுதியில் Shivam Dube அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 6,4,4,6 என விளாசினார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ஷிவம் துபே 32 ரன்களுடனும், பிரஷாந்த் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்த மார்ஷ், ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து 28 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஜோஷ் இங்லிஸ் 36 ரன்களில் அவுட்டான நிலையில், சதத்தை நெருங்கிய மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவரது இன்னிங்சில் 9 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் இடம்பெற்றன.
பின்னர் Nicholas Pooran அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் சிக்கலான நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
