மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது கூப்பன் விநியோகம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக சார்பில் பாலாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரம் பகுதியில், அதிமுக சார்பில் சிலர் வீடு வீடாக சென்று ₹10,000 மற்றும் ₹2,000 உதவித் தொகை தொடர்பான வாக்குறுதிகளை கொண்ட கூப்பன்களை (காசோலை வடிவில்) விநியோகித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்ததும், அப்பகுதியில் இருந்த திமுக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து, கூப்பன் விநியோகத்தை தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அதிமுக சார்பில் சிலர் அங்கு வந்து திமுக நிர்வாகியை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக தரப்பினர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
