கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முன்பு போராட்டம் நடத்த முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் மாவட்டத் தலைவர் பிரதீப் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், கோயில் மேலாளர் செந்தில்குமார் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, நிர்வாகிகள் கோயிலுக்கு வழிபாட்டிற்காக செல்வதாக தெரிவித்தனர். இருப்பினும், அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாவட்டத் தலைவர் பிரதீப் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலின் பிரதான நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டு, மாற்று நுழைவாயில்கள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
