சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், “எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களிலும் நீர்நிலைகளிலும் குப்பை கொட்டுவதை அனுமதிக்க முடியாது” என்று Madras High Court Madurai Bench திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இளையான்குடி வடக்கு சாலைகிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மயான நிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேரூராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மின்வாரிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், கருவூலம் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலகங்களுக்கு வருவோர் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளின் போது, தனியார் நிலம் மற்றும் சமுத்திரனேந்தல் கண்மாய் பகுதிகளிலும் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்பட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் N. Sathish Kumar மற்றும் M. Jothiraman அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, மயானப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் குப்பை கொட்ட முயன்றால் பொதுமக்களின் எதிர்ப்பு எழுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், குப்பை கொட்டுவதற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படவில்லை” என்று கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜூன் 25-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
