கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும் என பா.ஜ. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.
இந்த நிலையில், பா.ஜ.வின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
பெண்களுக்கு மாதந்தோறும் ₹3,000 வழங்கப்படும்.
ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
எல்லை வழியாக நடைபெறும் பசு கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
மேலும், மாநில அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹3,000 நிதியுதவி வழங்கப்படும்.
மாநிலத்தில் நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ₹15,000 உதவி வழங்கப்படும்.
ஊழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
ரவீந்திரநாத் தாகூர் பெயரில் கலாசார மையம் அமைக்கப்படும்.
வாக்குறுதிகளை வெளியிட்ட பின்னர் அமித்ஷா கூறியதாவது:
மேற்கு வங்கத்தை இருண்ட நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே எங்களின் இலக்கு. இந்த தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடி கனவு காணும் வளர்ந்த இந்தியாவிற்கான செயல் திட்டமாகும்.
மக்கள் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுடன் உள்ள தொடர்பு காரணமாக மம்தா பானர்ஜி மூன்று முறை ஆட்சிக்கு வந்தார்.
கம்யூனிச ஆட்சியை அகற்ற மக்கள் அவரை தேர்வு செய்தனர். மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டும், கும்பல்கள் மற்றும் ஊடுருவல்காரர்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தார்.
தற்போது, அதே மக்கள் மாற்றத்தை நாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ. வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
