வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதியை மறுத்த தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழுவின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த அதோனு சாஹா என்ற சிறுவன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க அவரது தாய் மோனிகா ராணி சாஹா முன்வந்திருந்தார்.
ஆனால், சிறுவனின் தாய் மற்றும் தந்தைக்கு இடையிலான உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி, தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மறுத்தது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த G. R. Swaminathan பிறப்பித்த உத்தரவில், தாய்-மகன் உறவை நிரூபிக்கும் வகையில் வங்கதேச அரசு வழங்கிய தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்பச் சான்றிதழ், பாஸ்போர்ட், விசா, கல்விச் சான்றிதழ் மற்றும் டி.என்.ஏ. ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தும் அங்கீகார குழு ஒப்புதல் வழங்காதது ஏற்க முடியாதது என்று குறிப்பிட்டார்.
மேலும், சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா பங்கேற்றுள்ள நிலையில், பிற நாடுகள் வழங்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தாயார் தனது மகனுக்கு உறுப்பு தானம் வழங்க முன்வந்துள்ள சூழலில், அவருக்கும் அவரது கணவருக்கும் இடையிலான உறவை ஆராய்வது இந்த வழக்கில் தொடர்பற்ற மற்றும் தேவையற்ற விஷயம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி நிர்வாக முடிவுகளை எடுப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல எனக் கூறிய நீதிமன்றம், சிறுவனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு உடலுறுப்பு மாற்று அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டது.
