கோவை: தமிழக அரசின் அனுமதியில் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு மாறாக, கோவை காந்திபுரம் சந்திப்பில் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ஈ.வெ. ராமசாமி சிலை நிறுவப்பட்டதாக கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவை நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் கட்டப்பட்ட போது காந்திபுரம் சந்திப்பில் இருந்த ராஜாஜி மற்றும் ஈ.வெ. ராமசாமி சிலைகள் அகற்றப்பட்டன. பின்னர் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் முன்பு மாநகராட்சி நிலத்தில் அமைக்கப்பட்ட பெரியார் படிப்பகம் அருகே 2016ம் ஆண்டு திராவிடர் கழகத்தினர் ஈ.வெ. ராமசாமி சிலையை நிறுவினர்.
இந்நிலையில் சமீபத்தில் மாநகராட்சி சார்பில் சாலைத்தீவு பகுதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சத்தி சாலை திருப்பத்தில் சந்திரயான் ராக்கெட் மாதிரி அமைக்கப்பட்டது.
இதற்குப் பின்னர் காந்திபுரம் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே முன்பு இருந்த ராஜாஜி சிலை இடத்தில் திராவிடர் கழகத்தினர் ஈ.வெ. ராமசாமி சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது.
அரசு அனுமதி வழங்கிய இடம் வேறாக இருந்தும், கோவிலுக்கு எதிரே சிலை நிறுவப்பட்டதாக கூறி சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், அரசு உத்தரவின் அடிப்படையில் முறையாக அனுமதி பெற்று சிலை நிறுவப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சிலர், அரசு அனுமதி வழங்கிய இடத்திற்கு மாறாக சிலை நிறுவப்பட்டதாக கூறி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
