புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள் மற்றும் மத நிறுவனங்களின் தங்க இருப்புகளை பணமாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் பல நூற்றாண்டுகளாக வழங்கிய காணிக்கைகள் மூலம் 3,000 முதல் 4,000 டன் வரை தங்கம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்த தங்கங்கள் கோவில்களின் பாதுகாப்பு அறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவில்களின் தங்க இருப்புகளுக்கு ஈடாக மத்திய அரசு தங்கப் பத்திரங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து Ministry of Finance வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவில்களின் தங்க இருப்புகளை பணமாக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள் அல்லது வேறு எந்த மத நிறுவனங்களின் வசமுள்ள தங்கத்தையும் பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிடவில்லை. இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை,” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு, “இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்பவோ பரப்பவோ கூடாது. சரிபார்க்கப்படாத தகவல்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். அரசு திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் அரசு இணையதளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும்,” என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
