கேரள காங்கிரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து விமர்சனப் பதிவு வெளியிட்ட கேரள காங்கிரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளப் பதிவால் சர்ச்சை
கேரள காங்கிரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், கடந்த அக்டோபர் 12ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து விமர்சனக் கருத்துகள் அடங்கிய பதிவு வெளியிடப்பட்டது. அதில் அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பு அந்தப் பதிவை நீக்கியது. மேலும், பதிவுக்குக் காரணமான நபரைப் பொறுப்பிலிருந்து நீக்கியதாகவும் அறிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மனு
கேரள காங்கிரஸ் தலைவர் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்டோர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பி, வழக்கறிஞர் வினித் ஜிண்டால் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கருத்து
விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:
தீர்ப்புகள் எப்போதும் விமர்சனத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம். ஆனால், கருத்துச் சுதந்திரம் என்பது நீதி நிர்வாகத்தை அச்சுறுத்துவதற்கான கேடயமாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அரசியல் அங்கீகாரம் தேவையில்லை. அது சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. நீதித்துறையின் அரசியலமைப்புச் சார்ந்த நிலை என்பது அரசியல் வசதிக்கான விஷயம் அல்ல. அரசியலமைப்புக்கு மேலாக எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கேரள காங்கிரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய காங்கிரஸ்
விசாரணையின்போது கேரள காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் பொறுப்பாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அந்தப் பதிவு வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார். பின்னர் பதிவு நீக்கப்பட்டதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த மன்னிப்பு உண்மையானதா என்பதை நீதிமன்றம் ஆராயும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
