கர்நாடகாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என முதல்வர் D. K. Shivakumar அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற சிவகுமார் தலைமையில், விதான் சவுதாவில் நேற்று மாலை முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவகுமார், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இலவச பயண வசதி வழங்கப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும் என்றார்.
மேலும், மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போக்குவரத்துத் துறையுடன் ஆலோசித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு வேலைவாய்ப்புகளில் இளைஞர்களை அதிகளவில் நியமிப்பதற்கான திட்டமும் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வேலை தேடுபவர்களுக்கு உதவும் வகையில் கர்நாடக அரசு தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் வேலைவாய்ப்பு நாடுபவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
