வாஷிங்டன்: ஈரான் ஆட்சியாளர் மற்றும் மதகுரு அயதுல்லா கமேனி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான தண்டனையாகவே தற்போதைய போர் நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஈரானுக்கு எதிராக துல்லியமான மற்றும் சிக்கலான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு எதிராக மறைமுகமாக யுத்தம் நடத்தி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெய்ரூட்டில் நடந்த கார் குண்டுவெடிப்பு, கப்பல்கள் மீது ராக்கெட் தாக்குதல், தூதரக அதிகாரிகள் கொலை மற்றும் அமெரிக்கா, ஈராக் பகுதிகளில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கும் ஈரான் ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்த போரை அமெரிக்கா துவக்கவில்லை என்றும், ஆனால் அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதிலடி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அமெரிக்கர்களை கொன்றோ அல்லது மிரட்டியோ இருக்கும் நபர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரான் போன்ற நாடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், அதிபர் டிரம்ப் அந்த நிலைப்பாட்டை கடுமையாக செயல்படுத்தி வருவதாகவும் ஹெக்சேத் கூறினார்.
ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மையங்கள், கடற்படை தளங்கள் மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த போரில் அமெரிக்க படைவீரர்கள் உயிரிழந்துள்ளதையும் அவர் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
