ஓமனில் உள்ள எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த சூழலில் ஓமனில் நடைபெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல், அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குவைத்தில் நடைபெற்ற தாக்குதலில் சர்வதேச விமான நிலையத்தின் சில கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஓமனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
