ஈரான் பிரச்சினைக்கு IMEC தீர்வாகுமா?
வாஷிங்டன்: இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடமான IMEC, ஈரான் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தையொட்டி நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தொடர்பான அமர்வில் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மாற்று வர்த்தக மற்றும் எரிசக்தி வழித்தடங்கள்
ஈரானைச் சுற்றியுள்ள பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தக சவால்களை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை அமெரிக்க நிர்வாகம் வலுவாக ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குழாய் வழியாகவோ அல்லது பிற வழிகளிலோ கச்சா எண்ணெயை வெளியே கொண்டு செல்வதற்கான மாற்று வழிகளை உருவாக்குவதற்கும் ஆதரவு அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன இந்த IMEC திட்டம்?
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது அறிவிக்கப்பட்ட பன்னாட்டு உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் திட்டமாகும்.
இதில், இந்தியாவை வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் கிழக்கு வழித்தடமும், வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்கு வழித்தடமும் இடம்பெறுகின்றன.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் போக்குவரத்து சிக்கல்களுக்கு மத்தியில் மாற்று வர்த்தக மற்றும் எரிசக்தி வழித்தடங்கள் தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
“ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்”
கடந்த பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு பிராந்தியம் எதிர்கொண்டு வரும் சவால்களை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் விவகாரத்திற்கு IMEC உள்ளிட்ட மாற்று வழித்தடங்கள் தீர்வாக அமையும் என்பது தனது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
CNN செய்தியாளர் மீது ட்ரம்ப் கோபம்
இதனிடையே, ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்பை செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்விகள் எழுப்பியபோது, CNN செய்தியாளரிடம் அவர் அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.
CNN உள்ளிட்ட சில ஊடகங்கள் தன்னைப் பற்றியும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்தும் தவறான தகவல்களை வெளியிடுவதாக ட்ரம்ப் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த சூழலில் CNN செய்தியாளரை பார்த்த ட்ரம்ப், “நீங்கள் இங்கே இருக்கக்கூடாது” என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் விவகாரத்தில் தொடரும் பதற்றம்
அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ட்ரம்ப் ஐ.நா. பொதுச்சபையில் ஈரானுடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்களையும் வலியுறுத்தியுள்ளார். ஈரான் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழுத்தத்தையும் அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
