ரியாத்: மேற்காசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் பொறுப்பற்ற செயலாகும் என்று அமெரிக்கா மற்றும் மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் இணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதல்களால் பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. இதன் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்காசியாவின் ஆறு நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஈரான் நடத்திய தாக்குதல்கள் பல நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரில் நேரடியாக ஈடுபடாத நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்களின் குடிமக்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த தாக்குதல்களுக்கு எதிராக சுயபாதுகாப்பு உரிமையை பயன்படுத்தத் தயார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
