புதுடில்லி: “இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கை தொடர்பாக, இந்திய போட்டி ஆணையம் ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) உறுதி செய்ததுடன், மெட்டா மற்றும் வாட்ஸ் அப் பயனர்களின் தரவை விளம்பர நோக்கங்களுக்காக பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து இந்திய போட்டி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. மெட்டா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வாட்ஸ் அப் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அகில் சிபல் ஆஜராகினர். அபராதத் தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கூறியதாவது:
“ஒரு தகவல்கூட பகிர்ந்து கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வாட்ஸ் அப்பை பேஸ்புக் வாங்கியுள்ளது; நாளை வேறு யாரோ வாங்குவார்கள். அப்போது தரவு பரிமாற்றம் நடக்கும். இந்த நாட்டின் தனியுரிமைக் கொள்கையுடன் விளையாட முடியாது. இந்த நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.
பயனர்களுக்கு விருப்பத் தேர்வு வழங்குகிறோம் என வாட்ஸ் அப் கூறுகிறது. சந்தையில் நீங்கள் ஒரே நிறுவனமாக ஆதிக்கம் செலுத்துகிறீர்கள். பிறகு ‘விருப்பத் தேர்வு’ என்ற பெயரில், ‘வாட்ஸ் அப்பை விட்டுச் செல்லுங்கள் அல்லது உங்கள் தகவலை பகிர்ந்து கொள்வோம்’ என கூறுவது தான் அர்த்தம். ஏழை பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உங்கள் கொள்கைகளை புரிந்து கொள்வார்களா?
லட்சக்கணக்கான மக்களின் தரவுகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள். இது தரவுகளை திருடுவதற்கான கண்ணியமான வழி. பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்காதவரை இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம்,” என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வணிக நோக்கங்களுக்காக பயனர்களின் தரவுகளை பகிரும் முறையை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “இந்திய அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். குடிமக்களின் தனியுரிமையை சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது,” என தெளிவுபடுத்தினார்.
