சென்னை: வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தவெக தலைவர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
விஜய் நடித்த புலி படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி, விஜய் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, புலி படத்தில் நடித்ததற்காக 16 கோடி ரூபாய் காசோலையாகவும், கூடுதலாக 15 கோடி ரூபாய் பணமாகவும் பெற்றது கண்டறியப்பட்டது. இதில், 15 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கூறியது.
இதையடுத்து, அந்த 15 கோடி ரூபாய் மறைக்கப்பட்ட வருமானத்திற்காக 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் உரிய கால அவகாசத்துக்குள் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, விஜய் தரப்பில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தனது மனுவில், “தனது தரப்பு விளக்கத்தை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. இந்த வழக்கில் பல சிக்கல்கள் உள்ளன. வருமான வரித்துறை, புலி படத்திற்கு பிந்தைய வருமானத்தையும் சேர்த்து கணக்கிட்டுள்ளது. ஆனால் கால அவகாசங்கள் வேறுபட்டவை. எனவே இந்த விவகாரத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. வேண்டுமென்றே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
