ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு இந்திய சரக்கு கப்பல் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது. கடந்த 8ஆம் தேதி ஓமன் கடற்கரை அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற இந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மற்றொரு சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து, ஓமன் கடற்படையின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் 24 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பிடித்த கப்பலில் இருந்து 21 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், மாயமான மூன்று இந்திய மாலுமிகளை கண்டுபிடிக்க தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலை யார் மேற்கொண்டனர், எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
